இனிமே அப்பா உன்னை
அடிக்கவே மாட்டேன். ஏன்னா நீ ரொம்ப பெரியவனா வளர்ந்துட்டே..
பழமை வாய்ந்த
அந்த கல்லூரியின் மாபெரும் ஆலமரத்தின் அடியில் நின்று கொண்டு சுற்றி இருப்பவர்கள்
பற்றிய நினைவின்றி பேசினார்.
நான் உன்னை
ரொம்ப அடிச்சுட்டேன் தானே..வலிக்குதாடா....
இரண்டு
ஆண்டுகளாக பெல்டை தொடாத அப்பா, அவனின் கன்னத்தை தடவிக்கொண்டே அனுசரணையாக கேட்டார்.
அன்னிக்கு
உன்னை அடிச்சவனும் நான் தான் இன்னிக்கு இப்படி பாசமா பேசுறவனும் நான் தான்.. நான்
பெரிய சிவாஜி ரசிகன் தெரியுமா.. கல்யாணம் ஆன புதுசுல அவரை மாதிரியே நடிச்சு
காண்பிச்சு உங்க அம்மாவ சிரிக்க வைப்பேன்..
அதனால் நான்
எது பண்ணிணாலும் நான் நடிக்கிறதா கிண்டல் பேசுறா.. உங்க தாய் மாமன் கூட போன வாரம்
கல்யாண வீட்டுக்கு போன என்னை செவாலியே சிவாஜி வர்றார் பாருங்க என பேசி
சிரிக்கிறான்
ஆனா நான்
உண்மையான தான் இருக்கேன்டா.. எங்க தலைவர்கிட்ட உங்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க
தெரியலை என்ற போது சொன்னாரூ.. எனக்கு திரையில் நடிக்க தெரிஞ்சுது வாழ்கையில்
நடிக்க தெரியலை அப்படின்னு.
நான் மட்டும்
இல்லடா, சிவாஜி ரசிகர்கள் எல்லோருமே உணர்ச்சிவசப்பட்டவங்க தான் ஆனால் எங்களுக்கு
வாழ்கையில் நடிக்க தெரியாதுப்பா பேச பேச அவரின் நாக்கு குளறியது
அன்னிக்கு
உன்னை தப்பா நினைச்சுகிட்டே அடிச்சுட்டேன்.அந்த காலத்துல பொண்ணுகளை நினைச்சு
கவலைப்பட்டோம் இந்த காலத்துல பொண்ணை விட பையனை பத்தி கவலை தான் அதிகமா இருக்கு
இல்லப்பா
எனக்கு வலிக்கவே இல்லை..ஆனா எதுக்கு அடிச்சீங்கன்னு தான் இன்னும் புரியவே இல்லை.
நான் காதலுக்கு எதிரானவன் இல்லடா..ஆனா உன்னை எந்த பொண்ணும் ஏமாத்திட கூடாதுன்னு தான் அப்படி செஞ்சேன்.
நான்
யாரையுமே காதலிக்கலையே.உங்களையும் அம்மாவையும் விட எனக்கு யாரையுமே தெரியாதே..
நீங்க எங்களை யார் வீட்டுக்கும் கூட அழைச்சுட்டு போகலையே.
இல்லட்டா
அன்னிக்கு நீயும் அந்த பொண்ணும் பேசிக்கொண்டு இருந்ததை மாடியில் இருந்து
பார்த்துட்டு தான் இருந்தேன்..
ஏதோ என்னோட
சின்ன வயசு வேதனை.. அதனால் தான் உனக்கு அறிவுரை தெரியாம அப்படி
பண்ணிட்டேன்.
அப்பா நான்
எல்லாரிடமும் அன்பா தான் பழகுவேன்.அதுக்காக நான் அவளை லவ்வு பண்ணிட்டேன்னு நீ
நினைச்சா எப்படிப்பா.
தப்புதான்டா கண்ணா.. அவனின் தோளை கட்டிக்கொண்டு மன்னிச்சிடு கண்ணா..இனி நீயாவது உன் இஷ்டப்படி சுதந்திரமா வாழுடா..
யாராவது
உன்னை காலேஜில் படிக்கும் போது லவ்வு பண்ணினாலும் அந்த பொண்ணையே உனக்கு கல்யாணம்
பண்ணி வைக்கிறேன்டா..
கல்லூரியில் சேர அப்பிளிக்கேஷன் வாங்கிய நாளில், காலேஜ் சீட் கிடைக்குமா என்று கவலை படாமல், மகனின் வருங்காலத்தை பற்றி பேசியது அப்பாவின் கோழை மனது.
எனக்கு நல்லா
படிச்சு நல்ல நிலைக்கு வரணும்..அதே சமயம் நீங்க அனுமதிச்சா ஹாக்கி டீம்ல சேருவேன்.
நம்புங்கப்பா
நிச்சயமாக படிப்புலையும் கவனம் செலுத்துவேன்.
இவர்களின்
பேச்சு அனைவரின் காதுகளில் விழுந்ததா என்று தெரியாது.ஆனால் அனைவரின் கண்களும்
இவர்களை நோக்கியே இருந்தது.
கண்கலங்கிய
அப்பாவின் தோளில் கிடந்த கட்டம் போட்ட சிட்டி துண்டை எடுத்து அவரின் கண்களை துடைத்தான்.
அப்பா
வாங்கப்பா போகலாம்..
இல்லப்பா,
இங்கே கேண்டீன் இருக்கும் அதுல போய் சாப்பிட்டு விட்டு போகலாம்.
அம்மா சமைச்சு வைச்சிருப்பாளே..
ஓர் நாள் வெளியே சாப்பிட்டா அவ கோபிச்சுக்க மாட்டா.
பாப்பா
இல்லாம எப்படிப்பா தனியா நாம சாப்பிட முடியும்.இதை கேட்டா அவ மனசு எவ்வளவு
கஷ்டப்படும் தெரியுமா.
கண்ணில்
மின்னல் தெரிக்க பேசியவரின் முகத்தில் கவலை படர்ந்தது.
சில நிமிட
மெளனத்தகற்கு பிறகு.
சரிப்பா நாம வீட்டுக்கு போகும் போது அந்த பஸ்ஸாப்புல இருந்த கடையில் சம்சாவும் அவளுக்கு பிடிச்ச ஆந்திரா முறுக்கும் வாங்கிட்டு போவோம் சரிதானா..
ஏதோ
இந்தியாவும் பாகிஸ்தானும் சமரச ஒப்பந்தம் கையெழுத்திட்டு களைத்து போய், அடுத்த கட்ட
நிலைக்கு செல்வது போல் காலேஜ் கேண்டீன் நோக்கி சென்றனர்.
ஐயா..
பொங்கல் மட்டும் தான் இருக்கு.. பஜ்ஜி போட பத்து நிமிஷம் ஆகும் உள்ளே நுழையும்
முன்னரே சத்தமாக கேஷியர் சொல்வது காதில் விழுந்தது.
எது இருக்கோ
அதை தாங்க, தம்பி ஏதோ வயிறு நிறைச்சா போதும் வாய்க்கு ருசியே இல்லாட்டியும்
பரவாயில்லை
டீ மாஸ்டர்
சன்னமாக சிரித்தார்...அண்ணாச்சி நீங்க கிராமத்து ஆளா.
ஆமாம் எப்படி
உடனே கண்டுபிட்டிச்சீங்க.
அவரோட
அறிவுக்கு அமெரிக்காவுல தான் வேலைக்கு கூப்பிட்டாங்க. ஆனாலும் என்கூடவே
இருக்கணும்ன்னு ஆசைபட்டு மாஸ்டர் வேலை பார்க்கிறாரு.
இலைய போட்டு தண்ணீரையும் பொங்கலையும் வைத்த படி நக்கலாக சொன்னார் சர்வர் சண்முகம்
டேய், என்னடா
அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கே, சட்னி சாம்பார் உங்க வீட்டு கிழவியா வந்து
கொடுப்பா சீக்கிரம் வாடா.. நமக்கு வியாபாரமே நாலு மணி நேரம் தான் இதுல எப்போ பாரூ
போன் நொண்டிக்கிட்டு..
எப்படி
கண்டுபிட்டிச்சீங்க சொல்லவே இல்லையே, அதை முதல்ல சொல்லுங்க தம்பி மீண்டும்
கேட்டார் வேலு..
அட நீங்க வேற
இது என்ன பிரம்ம சூத்திரமா...மனசுல உள்ளதை அப்படியே வெளிப்படையா பேச
கிராமத்துகாரங்களால் தான் முடியும்.மனசுல ஓண்ணு வைச்சுகிட்டு வெளியே நல்லவன்
மாதிரி நடிக்க தெரியாத வெள்ளந்தியான குணம்.
நான் கூட
இங்க வந்து புதுசுல இப்படித்தான் வெளந்தியா பேசி கஷ்டப்பட்டேன்.. ஆனா இந்த எட்டு
வருஷத்துல எண்பதாயிரம் நெளிவு சுழிவு கத்துக்கிட்டேன்... மனசுல இருக்கிறதை
வெளிப்படையாக எப்பவுமே பேசவே மாட்டேன்..என்ன உண்மையவே பேசினா வியாபாரம் படுத்து
தூங்க வேண்டியது தான் ஓனர் செந்தில் சொல்லவும் கடையில் இருந்த அனைவரும்
சிரித்தனர்.
பல
நாட்களுக்கு பிறகு தன்னையும் அறியாமல் உண்மைய சத்தமாக பேசிவிட்டு, அவர்கள் சிரித்த
பிறகே தன்னை உணரந்த படி அசடு வழிந்தார் கடை ஓனர்.
அண்ணாச்சி
பஜ்ஜி சூடா இருக்கு..
ஆளுக்கு
இரண்டு சூடா வையுடா..
தம்பி
அதுவெல்லாம் வேண்டாம்.காசு கம்மியா தான் இருக்கு
அட... எங்க
அண்ணன் நாலு பஜ்ஜி சாப்பிட்டாலும் கல்லாவுல காசு நிறைச்சு தான் இருக்கும் என்ற படி
கண்சிமிட்டினார்
அவரை தன்
உடன் பிறந்த அண்ணனாகவே ஏற்றுக்கொண்ட ஓனர்.
சுடச்சுட
பரிமாறப்பட்ட பஜ்ஜியின் சூட்டை தாங்க இயலாமல், மகனின் கை சுட்டது.
தம்பி, சூடான
பஜ்ஜிய இப்படி பிச்சு சாப்பிடணும்.
அந்த பஜ்ஜியை
உடைத்து அவனுக்கு ஊட்டி விட்டார் அவனின் அன்பான அப்பா
அப்போது
கேண்டீன் உள்ளே வந்த ஓருவரை பார்த்து அனைவருமே எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
ஆனால்
அப்பாவும் மகனும் பஜ்ஜியில் இருந்த எண்ணெயுடன் போட்டி போட்டு தங்களின் பாசத்தை
புழிந்து கொண்டு இருந்தனர்.
அவர்
சாப்பிடுவதை நின்று வேடிக்கை பார்த்த படி இருந்த மனிதர்.
எப்போதும்
அதிகார தோரணையில் பேசும் அவர் மெலிதான குரலில் கேட்டார்.
ஐயா உங்க
பையனா.. காலேஜில் சேர்க்க வந்தீங்களா..
ஆமாங்கய்யா..ஆனா
காலேஜ் சீட் கிடைக்குமான்னு தெரியலை.. இங்கே எல்லாம் பணக்கார வீட்டு
புள்ளைங்களுக்கு தான் சீட்டு கிடைக்குமாமே..
எவ்வளவோ
சொல்லி பார்த்தாச்சு.ஆனா இவனுக்கு இந்த காலேஜ் மேல ஏதோ கிறுக்கு பிடிச்சு
இருக்கு...படிச்சா இங்கே தான் படிப்பேன் இல்லாட்டி.நானும் உன் கூடவே ஆடு மாடு
மேய்சுகிட்டு வயல வரப்புன்னு வாழுறேன்னு சொன்னான்.சரி நாம தான் படிக்காம
போயிட்டோம் இவனாவது படிச்சு நல்ல நிலைக்கு வந்தா நல்லது தானே.
பிரின்ஸ்பாலை
போய், பார்த்து உங்க நிலையை சொல்ல வேண்டியது தானே.
அவர் ரூம் முன்னாடி தான் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்தோம். திங்கள்கிழமை வரச் சொல்லிட்டாங்க..அவர் ஏதோ மீட்டிங்கில் இருக்கிறாம். அவர் வேற கோபக்கார மனுசனாமே. அதான் என்ன செய்யுறதுன்னே புரியாம இருக்கோம்.. இன்னிக்கு வயலுக்கு தண்ணி பாச்சல..செம்மறி கூட்டத்தை மச்சான்கிட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன். ஆறு மணிக்கே கிளம்பியாச்சு.மணி இப்போ 11 மணி அதான். வந்த வேலைதான் முடியலைன்னு வயித்து தெரியலையே..பசி உயிர் போகுது அதான் ஏதாவது சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று இங்கே வந்துட்டோம். ஜப்பசியில் பெய்த்த அடைமழை போல் பேசி முடித்தார்.
கேண்டீன்
இருந்தவர்களுக்கு அதிசயமாக இருந்தது, எட்டு வருஷத்துல ஓர் நிமிஷத்துக்கு மேல
யாராவது பேசினாலே கோபத்தை காட்டும் மனிதர் இப்படி அமைதியா இருக்காறே புரியாமல்
வியந்து பார்த்தனர்.
அந்த
கோபக்கார மனுஷன் நான் தான் புன்னகையுடன் சொன்னார்..
ஏதோ பெரிய தவறு செய்துவிட்ட நினைப்பில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறந்து. ஐயா என்னை மன்னிசுடுங்க எப்படியாவது என் பையனுக்கு இந்த காலேஜில் சீட் கொடுங்கய்யா எச்சில் கையுடன் காலில் விழுந்தார்..
ஏலே நீயும்
விழுடா அவர் சொன்னவுடன் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு போல் அவனும் அவர்
காலில் விழுந்தான்.
Sorry Sir..,
எங்க அப்பா அவ்வளவா படிக்கலை அவருக்கு சூதுவாது எதுவுமே தெரியாது.. ஆடுமாடு, வயல்
தவிர அவருக்கு எதுவுமே தெரியாது..
அப்பாவும்
மகனும் பஜ்ஜி தின்ற எச்சில் கையுடன் கூப்பிட்ட படி நின்றனர்.
கூட்டத்தில்
அனைவரும் முணுமுணுத்தனர்.சீட் இனி கிடைச்ச மாதிரி தான்.
நீங்க முதல்ல
சாப்பிட்டு முடிங்க.. நான் காத்திருக்கிறேன்.
முதன் முதலாக
கல்லூரி பிரின்ஸிபாலை சிரித்த முகத்திலும் இவ்வளவு அன்பாகவும் பார்த்து
செய்வதறியாது தவித்தனர்
இருவரையும்
மீண்டும் சாப்பிட வைத்தார்.
மாஸ்டர் டீ
போடுங்க. இஞ்சி டீயை வாங்கி மிகவும் ரசித்து குடித்தார்.. அந்த நேரத்தில் உள்ளே
நுழைந்த தமிழ் துறை பேராசிரியர் பிரின்ஸ்பாலை கண்டு பம்மினார்.
டூட்டி
நேரத்தில் கேண்டீனில் என்ன வேலை என்று கத்திவிடுவாரே என்ற பயத்தில்.ஆனால் அவரோ
சந்தோஷமாக வாங்க சார் பஜ்ஜி வாசம் ரூம் வரை வந்துடுச்சா..கேலியாக கேட்டார்.
அசடு
வழிந்தார் . மிஸ்டர் குமரேசன் நீங்க போய் ஆபிஸ் இருந்து College seat
allocation, கோவிந்தனை பேப்பர் ஸ்டாம்ப் எல்லாம் எடுத்து கிட்டு சீக்கிரமா
வரச்சொல்லுங்க பத்து நிமிஷத்துல ஓர் சீட் போடணும் ரொம்ப அவசரம். நீங்களும் உடனே
வரணும் புரியுதா..
சரி சார்
என்ற படி L.G.K குழந்தை ஓடுவது போல் வேகவேகமாக ஓடினார் .
சில
நிமிடங்களில் அது கேண்டீனா.அல்லது ஆபிஸ் அலுவலகமா என்பது போல் காட்சிகள் மாறியது.
தம்பி,
உன்னோட மார்க் ஷீட் காட்டு..
பதற்றமாக கை
கால் நடுநடுங்க இருந்தவனை ஆதரவாக பற்றினார்..
பதட்டமே படாத
தம்பி..அந்த பையை கொடு.. அழுக்கெறிய அந்த கோவில் கும்பாபிஷேக மஞ்சள் பை அதில்
கைபிடி கூட பியிந்து போயி சிரித்தது.
அதிலிருந்து
ஓவ்வொரு பேப்பரையும் எடுத்து பார்த்தார்.
அதில் அவர்
வரைந்த ஓர் அழகான ஓவியமும் இருந்தது.
ஐயா அது
இவனோடது தான்.எப்பவாச்சும் இப்படி பென்சில்ல கிறுக்குவான்.
உன்கிட்ட
நிறைய திறமை இருக்குடா.. அதிகாரதோரணை அவரை மீண்டும் அரவணைத்தது.
நல்ல மார்க்
எடுத்து இருக்கே உனக்கு எந்த டிபார்ட்மெண்ட் வேணும்.
பதில் சொல்ல
தெரியாமல் அப்பாவும் மகனும் திணறினர்.
சார், எனக்கு
நீங்க எந்த சீட் கொடுத்தாலும் சம்மதம் தான்.
அப்போ B.A
arts, தந்தா போயி படிப்பீயா சிம்மம் போல் வார்த்தையில் கர்ஜித்தார்.
சரிதான்,
பையனுக்கு சீட் அவ்வளவுதான்.
மீண்டும்
இப்படியாக கூட்டம் நினைத்தது.
கண்கலங்கிய
படி அந்த மாணவன் சொன்னான்.சார் எனக்கு இந்த காலேஜில் படிக்கணும் என்று தான் ஆசை
மத்தபடி நீங்க எந்த படிப்பு கொடுத்தாலும் அதில் என்னால் முன்னேற முடியும் என்ற
தன்னம்பிக்கை இருக்கு.
பதிலுக்கு
இன்னொரு சிம்மம் கர்ஜிப்பது போலவே இருந்தது.
சில பேப்பரை
வாங்கி கையெழுத்திட்டார்.
இப்பவே
பேங்க்ல 1,250 ரூ பணம் கட்டி சேர்ந்துடுங்க..
அப்பாவும்
மகனும் விழிபிதுங்கி நின்றனர்.
கேண்டீன்
ஓனர் கல்லாவின் பணத்தை எண்ணிவிட்டு 1,000 ரூ தான் இருக்கு என்றார்.
இந்த முறை
பிரின்ஸிபால்.. புரியாமல் விழித்தார்.
சார் அவங்க
கிட்ட பஜ்ஜி சாப்பிடவே காசு கம்மியா தான் இருந்துச்சு...
தன் பேண்ட்
பாக்கெட்டில் இருந்து மூன்று ஆயிரம் ருபாய் தாளை எடுத்து குமரேசனிடம் கொடுத்தார்..
சார் நீங்க போயி இவங்களுக்கு வேண்டிய உதவியை செய்யுங்க.. இதையாவது ஓழுங்கா
செய்வீங்க இல்ல அதுக்கும் நான் தான் வரணுமா.
குமரேசன் முகத்தில் வியர்வை தாண்டவமாடியது..சரியா செய்வேன் சார்.
பில் கட்டி
இந்த பையனுக்கு அவனோட கிளாஸ்ஸ போய் காட்டுங்க. பிறகு வந்து என்னை பாருங்க
புரியுதா.கேண்டீன் தாண்டியும் அவரின் சத்தம் பலமாக கேட்டது.
ஐயா உங்க
பையனுக்கு முதல் குரூப்பில் இடம் கொடுத்து இருக்கேன் நல்லா படிக்க சொல்லுங்க..
இந்த முறை அவரின் பேச்சு பக்கத்தில் இருப்பவருக்கு கூட கேட்க மறுத்தது.
நீங்க சாமி
மாதிரி என்றவரை வாரியணைத்தார்.. இப்படித்தான் நான் காலேஜ் சேரும் போது எங்க அப்பா
எனக்கு பஜ்ஜி ஊட்டினார்.. முகத்தில் புன்னகை மின்ன பேசியவர்..
ஏதோவது
ஸ்வீட் இருக்கா என்றவுடன்.
சார்
ரவாகேசரி இருக்கு சார் காலையில் பத்து மணிக்கு சூடா போட்டது..
மூணு பிளேட்
கொண்டு வாங்க.. வழக்கத்திற்கு அதிகமாகவே தட்டு நிறைய நிரம்பி வழிந்து ரவா கேசரி.
ஓர் பிளேட்டை
எடுத்து அப்பாவின் வாயில் ஊட்டினார்..இது உங்களோட உண்மைய மட்டும் பேசுற வெளந்தியான
குணத்துக்கு நான் தரும் ஸ்வீட்.. அவரின் கண்கள் கலங்கியது..
ம்ம்
அழக்கூடாது கூடிய சீக்கிரத்தில் உங்க பையனும் என்னை மாதிரி வரணும் புரியுதா சொல்லி
விட்டு காலேஜ் கட்டிடம் நோக்கி நடந்தார்.
கிழிந்த
மஞ்சள் பையில், நீ விரும்பும் வரங்களை தருவாள் விஷ்ணு துர்க்கை என்ற வரியை வைத்த
கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார் தமிழ் பேராசிரியர் குமரேசன்.
அவரின்
மனதிற்குள்ளேயும் கேட்டது அப்பாவின் அறிவுரை
"சிவாஜி ரசிகர்கள் எல்லோருமே உணர்ச்சிவசப்பட்டவங்க தான் ஆனால் எங்களுக்கு வாழ்கையில் நடிக்க தெரியாதுப்பா"
No comments:
Post a Comment