தலைவிதி

சென்ற வருடம்
வரை நடித்த
அத்தனையும்
வெற்றி படங்கள்..
தொடர் வெற்றியால்
மனதில் உதித்த
அரசியல் ஆசை..
அவரையும்
பிடித்து இருந்தது
சில காலம்..
நேற்று நடந்த
புதுப்பட அறிமுக
விழா பேசிவிட்டு
மேடை இறங்கியவரை
சூழ்ந்து கொண்டு
பாராட்டி புகழ்ந்த
ரசிகர் கூட்டம்...
அவர் பேசிய
சொந்தப்படம்
தலைப்பு
தலைவிதி



மார்ச் 8

மார்ச் 8 சமர்பணம்

குழந்தையின்
முன்னால்
குவிந்து கிடந்தன
விளையாட்டு
பொருட்கள்
அத்தனையும்
விலையுயர்ந்தவை....
மேஜையின் மீது
அடுக்கிய பைல்கள்
அலுவலகத்தின்
கோடி ரூபாய்
வியாபார ஒப்பந்தங்கள்
மாலை நேரத்தில்
வீடு வந்தவுடன்
ஓடி வந்து
கால்களை
கட்டிக்கொண்டு
முகத்தை பார்த்து
உதடுகளில்
புன்னகையுடன்
கூப்பிட முயற்சித்த
வார்த்தை அம்மா.... இந்த
தருணம் சொர்க்கம் என்
அருகில்...
இதில் காமம் இல்லை
ஆனால் இவன் முத்தமிடும்
இடங்கள்...
நினைவுபடுத்தும்
அவன்
அப்பாவை ...
சீக்கிரம்...
வந்துவிடுவார்....
சொல்லியே
வளர்க்கிறேன்.
ஏனோ பணத்தையும்
புகழையும் தேடி சினிமா
ஆசையுடன் செல்லும் சராசரி
கணவன்.. குடும்பத்து
பாசம் புரியாத
ஜென்டில்மேன்....
என்னுடன் போகட்டும்
நான் படும்
பெண் வேதனை.

துர்க்கா

வாய் நிறைய
கூப்பிட்டு பழக
பழக்கி விட்டார்கள்
வந்தவர்களிடமும்
வருபவர்களிடமும்
அத்தனை இன்முகம்
காட்டி அழைப்பதுண்டு
அண்ணன், அக்கா,
அம்மா, ஜயா,
வார்த்தையில்
மரியாதை......
யாரிடமும்
பேச விரும்பாத
பிடிவாதக்காரி
அவள் ---அவனை
நோக்கி சென்று
கேட்டாள் தன்னிலை
அறிந்தவள்
தன்னையறியாமல்--
இனம்புரியாத
மகிழ்ச்சியுடன்.....
சில நொடிகளில்
சென்று விடுவார்
என்று தெரிந்தும்
சென்று ஆசையாக
சொன்னாள் -
நீங்கள் என்னை
பார்க்க அடிக்கடி
வருவீங்களா ???
பத்து வயது
பாவாடை சட்டை
தேவதையின்
விரல் பிடித்து
அருகிலேயே
அழைத்து
கட்டியணைத்தான்
இருவர் கண்ணிலும்
கண்ணீர்- மனதில்
விவரிக்க இயலா
அமைதி - தூரத்தே
நின்று இந்த
பாச போராட்டத்தை
ரசித்தபடி
சிவந்த முகத்தில்
துர்க்கா

செல்வ விநாயகா


வள்ளிமலை


யானை பொம்மை

யானை பொம்மை
வாங்க அப்பாவிடம்
காசு இல்லை
என்பது மறைக்க வேண்டி
" என் செல்லம்"
யானையே வாங்கி தாரேன் என்று
சொல்லியபடி
இடுப்பில் தங்கச்சி
பாப்பாவை தூக்கி
அழைத்து செல்கிறாள்
அம்மா

குடிகாரன்


தெய்வம்
இல்லையென்று
மேடையில்
முழங்கி விட்டு
வீடு வந்தவுடன்
பிள்ளையார்
கோவிலில்
என் பெயருக்கு
அர்ச்சனை செய்தீர்களா???
மனைவியிடம்
கேள்வி
சனி தசை
முடியும் வரை
மாதமொரு முறை
ஜோசியர்
சொன்னார்..
வார்த்தையில்
பயத்தின் உச்சம்
ஆட்டோ வாடகை
வாங்க நின்றவனின்
காதுளில் விழுந்த
சொற்கள் - தூரத்தில்
"உலகே மாயம்"
பாடல் பாடியபடி
தெருவோர
சாக்கடையில்
உருளும்
குடிகாரன்

சர்வதேச தேச பெண்கள் தினம்


யானை பொம்மை
வாங்க அப்பாவிடம்
காசு இல்லை
என்பது மறைக்க வேண்டி
" என் செல்லம்"
யானையே வாங்கி தாரேன் என்று
சொல்லியபடி
இடுப்பில் தங்கச்சி
பாப்பாவை தூக்கி
அழைத்து செல்கிறாள்
அம்மா

.
.
.
.
சின்னஞ்சிறு குழந்தைக்கு
தெரிந்த உலகம் அம்மா தானே

கோபக்காரி

உணர்ச்சியின்
வேகத்தில்
நிதானம் இழந்து
'கத்தியது'
கோபம் என்னும்
உண்மையின்
வெளிப்பாடு
பொய்மை பேசி
சிரிக்கும்
உறவுகளுக்கு
மத்தியில்
சிக்கிக்கொண்டு
திணறும் போது
ஆதரவு யாருமில்லை
அன்பு துளியுமில்லை
என்று அறிந்த
பின்பே எதிரில்
இருப்பவரை
காயப்படுத்த
வேண்டி சொன்ன
வார்த்தை உலகம்
புரிந்து கொண்ட விதம்
கோபக்காரி

பிள்ளையார்


கடற்கரையில்
கால் நனைக்க
சென்ற போது
கண்களில்பட்டது
கட்டியணைத்து
ஏதோ ஒன்றை
காதல் என்று
கொண்டாடும்
இளமை துள்ளல்
ஆடையில் எளிமைதாண்டி
எட்டிப்பார்க்கும்
ஏழைமை இருந்தாலும்
குழந்தைகளின்
குதூகலம் ரசிக்கும்
தாய் தந்தை
விலையுயர்ந்த
நாய் பிடித்த படி
தன்னந்தனியாக
பெரியவர் ஒருவர்
காதலுக்கும்
காமத்துக்கும்
மயங்காமல்
குடும்ப கஷ்டத்தை
எண்ணி கண்ணீரை
மறைத்து காட்சிகளை
உள்வாங்கும்
சராசரி ஆண் பெண்
கூட்டத்திற்கு மத்தியில்
சுண்டல் விற்ற படி
வரும் சிறுவனிடம்
சில்லறை கேட்டு
தகராறு செய்யும்
பகட்டு போலிகள்
அத்தனைக்கும்
சாட்சியாக
வீற்றிருக்கும்
கடற்கரை
கோவில்
பிள்ளையார்

முக்கியம்

கடற்கரையில்
கால் நனைத்து
வீட்டிற்கு
தெரியாமல்
வளர்த்த காதல்
கல்யாணத்துக்கு
பிறகு தான்
பல விஷயம்
புரிந்தது
கல்யாணத்துக்கு
அடிப்படை
அன்பும்
நம்பிக்கையும்
விட்டுக் கொடுக்கும்
புரிதல் தான்
முக்கியம்

தாயுமானவன்

கருப்பா
சிவப்பா தெரியாது
நெட்டையா
குட்டையா தெரியாது
முகம் குண்டா
கன்னத்தில்
குழியா தெரியாது
அவனா
அவளா தெரியாது
என்னிடம்
காட்டப்போவது
பாசமா
வேஷமா தெரியாது
பெண் பித்தன்
பிடித்தவனா
பணத்து ஆசை
கொண்டவனா
தெரியாது
வயிற்றில்
சுமப்பதால்
எப்படி இருந்தாலும்
இது என் குழந்தை
பத்து மாதம்
சுமந்து பெற்ற
பிறகும் தொடர்ந்து
விடும் பந்தம்
காதல் பாசம்
என்னும் நூலில்
கட்டி அணைத்து
வாஞ்சையுடன்...
வளர்ப்பேன்
அன்பு செய்வேன்
தாயுமானவன்

சாது சிதம்பர சுவாமிகள்

பள்ளி
படிப்பைவிட
ஏழையின்
இதயத்துடிப்பை
அறிய நினைத்து
விளக்கு ஏற்றி
விளங்க வைக்கும்
வெள்ளை வேட்டி
மனிதர்- வள்ளலார்
வழியில் அன்னம்
பாலிப்பதை
ஏற்று நடத்தியது
மட்டுமே
அனைவரும்
அறிந்தது
சித்துக்கள்
இவருக்கு
பிடித்த விளையாட்டு
சிலரே அறிவர்
இன்றும் கூட
உண்மை மனிதனின்
கண்ணீர்
துடைத்து
வழிநடத்தும்
வித்தை சொல்லி
வரைவது கடினம்
தலைமுறையும்
புகழ் பாடும்
சாதுச்சாமி
உன்னை வணங்கும்
தகுதி எனக்கில்லை
எனவே வீழ்ந்து
வணங்குகிறேன்
உன் காலடியில்
குருவே சரணம்.

மகா சிவராத்திரி

இந்து மதத்தின் சைவ மரபில் வந்த அனைவருக்கும் சிவனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறந்தது.

ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களும் சரி சித்தர் மரபு என்றாலும் மகா சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாடு செய்தால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை.

காதல் திருமணம்

ஆயிரம் பேருக்கு இறைவனின் பெயரால் அன்னதானம் செய்து விட்டு. எல்லாம் இறைவன் செயல் என்பதாக சொல்லும் உலகில்..
டீ வாங்கி குடிக்கும் போதும், மனைவி வீட்டில் கோபித்துக் கொண்டு சமையல் செய்யாத போதும்....

வேண்டா வெறுப்பாக ஹோட்டல் சென்று சாப்பிடும் போது எடுத்த போட்டோ.‌‌
அதற்கு ஆயிரம் லைக்
ஏனென்றால் செய்தது
காதல் திருமணம்...

குழந்தைகளின் உலகம் - மகிழ்ச்சியின் சொர்க்கமே

குழந்தைகளின் உலகம் என்றுமே சந்தோஷமானது. அதில் பொய்யும் புரட்டும் இல்லை. பக்கத்தில் இருப்பவன் முன்னேறி விடக்கூடாது அவனுக்கு எப்படியாவது இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று சிந்தனை. இல்லை.
இவன் என் ஜாதி மதம் என்று பிரிவினை கிடையாது...
இவனை வளர விட்டால் நம்ம பதவிக்கு ஆபத்து என்று வஞ்சனை கொண்டு கீழே தள்ளி விட்டு, பிறகு யாருக்கும் நான் தீங்கு செய்யவில்லை, சனிஸ்வரன் என்னை ஏன் இப்படி கஷ்ட படுத்துகிறார் என்ற புலம்பல் கிடையாது..
யாருக்கு தெரியாமல் பாவமன்னிப்பு கேட்கும் அவசியமில்லை.

தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்னும் பொறாமை இல்லை மாறாக பக்கத்தில் இருப்பவரின் பெயரை டீச்சர் சொல்லும் போது சத்தமாகவும் சந்தோஷமாகவும் இவன் என் பிரண்டு தெரியுமா உனக்கு? என்ற சந்தோஷ மிகுதியான உள்ளம் தான் அதில் உண்டு..
நிச்சயமாக எப்படியும் என் பெயரையும் கூப்பிடுவார்கள் என்று தன்னம்பிக்கை அதிகம்..
அதற்குள் பள்ளி மணி அடித்து விட்டால் வீட்டிற்கு வரும்போதும் வந்த பிறகும் தன் நண்பனுக்கு கிடைத்த பாராட்டுகளையும், அவனுக்கு நான் எப்படி கைதட்டி சந்தோஷபடுத்தினேன் தெரியுமா? என பேசத்தொடங்கி நாளை என் பெயர் சொல்லி அழைக்கும் போதும் அவன் எனக்கு முதல் ஆளாக கைதட்டுவான் என்றபடியே யாருக்கு தீங்கு நினையாத குழந்தை உலகம்
மகிழ்ச்சியின் சொர்க்கமே.....

வேலி

வல்லயக்கம்பு ஒன்று தான் பலருக்கு காப்பு.
இரண்டு வருடங்களுக்கு ஓர் முறை கொடுக்கப்படும் கொடை ஊர் மக்கள் திரண்டு வந்து சிறப்பு செய்வது மரபு.

கிராமத்து தேவதை கதை கேட்டு வளர்ந்த மனிதனில் தவறு செய்பவன் மிகவும் குறைவு.
சிலரின் வாழ்க்கை மட்டுமல்ல பலரின் வாழ்க்கையும் விதிப்படி தான் செல்லும் பரமனும் இதில் அடக்கம் என்பதே தேவதை கதைகள்..
சில தெய்வங்கள் விதியின் விளையாட்டு விரும்பி மனித உருவில் வந்து வாழ்ந்து பின்னர் தன் இறை சக்தியை உலகு அறிச்செய்யும்.
அவர்களுக்கு நிலையம் போட்டு வணங்கி வருவதும் இயல்பான நடைமுறை..

வயல் வெளியில் வெயில் மழையில் நனைந்து ஊரை இவர்கள் பாதுகாப்பு செய்வது. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவருக்கு மட்டுமே விளங்கும்.
நோய் நொடி தீர்த்து வைப்பது முதல் தலைமுறைக்கும் காவல் வருவது வரை கதைகள் ஏராளம்..

முறுக்கிய மீசை, அகண்ட உருட்டும் விழி.
ஆனால் கோபம் என்பது இவர்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளும் வேலி..

கிராமத்து வாழ்க்கை

கிராமத்து வாழ்க்கை என்றுமே பட்டணத்தில் இருக்கும் மனிதருக்கு புரிவதில்லை..
படிப்பும் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் எப்போதும் சிரித்தபடி மனதிற்குள் கோபத்தை புதைக்கும் தன்மை கிராமத்து மனிதருக்கு மிகவும் அரிது.
மனதில் தோன்றும் எண்ணத்தை வார்த்தையில் வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த அப்பாவிகள்..

பிறரை பற்றிய விமர்சனங்களை உடனுக்குடன் சொல்லும் தைரியம் அவர்களுக்கு அதிகமே.

ஏனென்றால் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து வாழப்பழகிய கிராமம்.

இங்கு எல்லைப்புறத்தில் இருக்கும் தெய்வம் எப்போதும் தன் செயலை கண்காணித்து கொண்டு இருக்கிறது அதற்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கை தான் கிராமத்தின் ஆணிவேர்...

தென்கரை மகாராஜாவும், முனியாண்டி, சுடலை, பேச்சியம்மன்,சொரிமுத்து அய்யனாரும், பட்டவராயனும், சங்கிலி கருப்பனும் குடும்பகாவல் என்ற பக்தி, இவர்களால் பயன் அடைந்தவருக்கு மட்டுமே தெரியும்..

கடல் கடந்து சென்றாலும்,
"அப்பா,கருப்பா உன்னை நம்பித்தான் போறேன். எனக்கும் குடும்பத்துக்கு நீயே துணை ".. என்று வேண்டி செல்பவருக்கு அவர் காட்சி கொடுத்த கதை ஏராளம்...

செய்யாத தவறுக்கு குற்றம் சாட்டப்பட்டு அவமானம் அடையும் சூழல்களிலும்..கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய போதும்.
அவரின்இடம் சென்று, நான் எந்த தவறும் செய்யவில்லை...
எனக்கு நீயே வழிகாட்டி என்று நெடுஞ்சாண் கிடையா விழுந்து வணங்கி வருவது..

பத்து ரூபாய் கீழே கிடந்தால் எடுத்து பிள்ளையார் காசு என உண்டியல் போடும் குழந்தை மனம் தான் இவர்களின் பிள்ளை மனம்..
உண்மை பேசும் மனிதருக்கு காவல் தெய்வங்கள் கண்டு பயம் வருவதில்லை.மாறாக பக்தியே மேலோங்கி நிற்கிறது...
நான் தவறு செய்து இருந்தால் சொல்லு என்று தெய்வத்திடமே வாதிடும் வழக்கம் வரை இந்த கிராமத்து வாழ்க்கை..

அவர்களுக்கு புரிவதில்லை..




காதலர் தினம்

ரோஜா மலரை
கையில் ஏந்தி
இந்த உலகின்
அனைத்தும்
எனக்கு நீயே-
ஓரே வார்த்தையில்
என்னை உயிராக
காதலிப்பதாக
சொல்லி விட்டான்
அந்த நாளை
இன்று நினைத்து
சிரிக்கிறேன் -
காதலர் தினத்தன்று
ரோஜா வாங்கும்
மனிதரை கண்டு
அவர்களும்
யதார்த்தமான
சூழலுக்கு
விரைவில்.......



சகஜம் மாப்ளே

காலையில்
கண்விழித்தது
மட்டுமே
நினைவில்
இரவில்
படுக்கையில்
தூங்க முயலும்
தருணத்தில்
இந்த நாளில்
பார்த்த வேலை
பற்றி யோசிக்கும்
முன்பே
தூக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறேன்.
அவ்வளவு
வேலை அலுப்பு
ஆனாலும்
மேனேஜர்
அடிக்கடி சொல்லும்
வார்த்தை
ஒரு வேலை கூட
ஒழுங்காக செய்ய
தெரியவில்லை..
சரி சார்....
உடம்பு சரியில்லை
ஓர் லீவு என்றால்
ஏனோ இந்த
முட்டாளுக்கு
தர மறுக்கிறார்...
நண்பன்
கேலி செய்கிறான்
IT வேலையில்
இது எல்லாம்
சகஜம் மாப்ளே

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...