சிஸ்டம் சரியில்லை

 ரஜினி என்பவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்னும் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுதுவதால் பத்திரிக்கைகள் விற்பனை சற்று அதிகமாகவே நடைபெறலாம். ஆனால் ஓர் முறை சிந்தியுங்கள், எதற்காக தேவையற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன.

ரஜினியின் படங்களை இன்றும் ஆவலுடன் பார்க்கும் ஓர் சராசரி மனிதரில் நானும் ஒருவன்.

எந்தவொரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட நபர்கள், சொல்லாமல் உடன் இருப்பவரின் யூகங்களிலும், ஊடகங்களின் அடிப்படையில் பேசுவது  நேரத்தை வீணாக்கும் செயல்.

சிஸ்டம் சரியில்லை என்னும் வசனம், பல வகை மீம்ஸ்களில் வந்து விட்டது. இந்த கட்டுரையை முழுவதும் படித்து விட்டு ஓர் முடிவுக்கு வாருங்கள்..

பிறகு சொல்லுங்கள், எந்த சிஸ்டம் சரியில்லை என்று.

நேர்மையான வழியில் இன்றும் வாழும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். தான் வாங்கும் சம்பளத்தை தவிர லஞ்சம் பெறாத பல நல்ல அரசு அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள்...

அரசு மருத்துவமனைக்கு சென்ற போது நான் கண்ட சில காட்சிகள், அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் லஞ்சம் வாங்குவார்கள் என்ற சிந்தனையை அப்படியே மாற்றித்தான் விட்டது.

மகப்பேறு பகுதியில் ஓர் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவருக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், அவர் சில ரூபாய்க்கு இனிப்பு ஸ்வீட்கள் வாங்கி, தன் மனதின் சந்தோஷத்தை அங்கே எல்லோருக்கும் பரப்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவரின் அம்மா  சொன்னார். டேய் ரமேசு அந்த நர்ஸ்க்கு 500 ரூபாய் கொடுடா என்றார்.

ரமேஷ் என்பவரோ செய்வதறியாது தவித்தார்.. அந்த பெண்மணியின் அருகே சென்று, எங்கிட்ட இருந்த எல்லா காசுக்கும் ஸ்வீட் வாங்கியாச்சு. மத்த செலவுக்கு அக்கா காசு கொண்டு வர்றதா சொல்லி இருக்கா என தன் பொருளாதாரத்தை சொன்னார்.

அப்போது அங்கே வந்த நர்சிடம், அம்மா தப்பா நினைச்சுக்காதே. என் பையனுக்கு வரவு செலவு சரியா பண்ண தெரியாது. நாளைக்கு நாங்க வீட்டுக்கு போகும் போது கட்டாயமா, உனக்கு பணம் கொடுத்து விட்டு தான் போவோம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள் அந்த பாட்டி.

அதற்கு அந்த நர்சு சொன்ன பதிலில் தான் எவ்வளவு அன்பும் பொறுப்பும் அக்கறையுடம் பொதிந்து கிடந்தது..

பாட்டி, இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இங்கே பிரசவம் பார்ப்பது இலவசம். நீங்க பேசினது எல்லாம் கேட்டுகிட்டு தான் இருந்தேன். நான் பார்கிற வேலைக்கு சம்பளம் கிடைக்குது.. என் வீட்டுக்காரர் ஆட்டோ தான் ஓட்டுறாரு... அவர் என்கிட்ட தினமும் சொல்லுறதே யார்கிட்டேயும் லஞ்சம் வாங்காதே அதேசமயம் அவங்க பாசமா கொடுக்கிற பணத்தை உதாசீனம் பண்ணாதே...

ஏன்னா, நீ பிரசவ வார்டில் இருக்கே. பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி.

எப்பவுமே குழந்தை பிறந்தவுடன் பெற்றவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி வார்த்தையில் சொல்ல முடியாது. தன்னை அப்பா அப்படின்னு ஓர் உயிர் கூப்பிட போகுதுன்னு சந்தோஷத்தில் பார்க்கிற, எல்லாருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லை.அது தான் மனித இயல்பு.

சட்டத்தின் பார்வையில் இது வேறே, ஆனா மனித உணர்வுகளை மதிக்கிறதும் முக்கியம். என்று சொல்லி விட்டு.

சரி உங்க கையில் எவ்வளவு பணமிருக்கு என்றார் அவர்...

அந்த பாட்டியோ தன் கைகளை நீட்டினாள், அதில் சில பத்து ரூபாய் நோட்டுகளும் சில்லறை காசும் இருந்தது.

புதிய ஓரு ரூபாய் நாணயத்தை எடுத்து விட்டு அவர் சிரித்தபடி சொன்னார். உங்க அன்புக்கு இதுவே போதும்...

என்ன ரமேஷ் எனக்கு சாக்லேட் கிடையாதா? உரிமையோடு கேட்டார்.

அவனோ தட்டுத்தடுமாறி சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்தான்.

எனக்கு நாளைக்கு பெரிய கேக் ஃபாக்ஸ் வாங்கி தரணும் சரியா என்றாள்...

சரி சிஸ்டர், நாளைக்கு கண்டிப்பா வாங்கியாறேன்...

எல்லோருக்கும் தெரியும், அவர் சும்மா பேச்சுக்கு தான் கேட்கிறார் என்று.... பத்து நாள் கழிச்சு வேலைக்கு போனா தான் அவனுக்கு காசு கிடைக்கும்.

இங்கே உலகில் யாரும் யாருக்கும் இனாமாக காசு கொடுப்பதே இல்லை.

கொடுக்கும் பணத்திற்கு பதிலாக சக்கையாக பிழிந்து வேலை வாங்கப்படுகிறது.

அந்த புதிய ஓரு ரூபாய் நாணயத்தை வீட்டிற்கு போகும் போது ஆஸ்பத்திரி முன்னால் இருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் போட்டார்....

ஏன்ம்மா, உன் கைராசி எல்லாமே சுகப்பிரசவம் தானே என்று கேட்ட கோவில் பூசாரியிடம்.

ஆமாம் என்பதுபோல தலையாட்டினாள்...

இவ்வளவு நல்ல மனசை கொடுத்த சாமி, உனக்கு இன்னும்... அவர் பேச்சை சட்டென்று இடைமறித்து சொன்னாள்.

பூசாரி அய்யா, சாமிக்கு எல்லாம் தெரியும்.என்றவளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது..

அந்த நர்சுக்கு பணம் கொடுக்ககூடாது என்றோ, நான் எதுக்கு பணம் கொடுக்கணும். இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி தானே என்றோ யாருமே பேசவில்லை.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.ஆனால் ஓட்டுகளை வாங்கும் வித்தை தெரிந்தவரே அரசியலில் வெற்றி பெறுகிறார்.

அரசியல் ஆசையில் தன் பல மதிப்பு சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம்.

இங்கே ஜனநாயக அரசியலில் அனைவருக்கும் உரிமை உள்ளது.ஆனால் அரசியலில் அதிர்ஷ்டமும் இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.

இந்திய ஜனநாயக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும்.


நேர்மையாக பணிபுரியும் அரசு ஊழியர்களும் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். சிஸ்டம் சரியில்லை என்று பொத்தாம் போதுவாக சொல்லாமல், எந்த துறையில் எந்த இடத்தில் என்று தைரியமாக யார் தவறு செய்தார்கள் என்று பெயரிட்டு சொல்லுங்கள்.



No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...